பிரத்யேக படிப்புகள் தளம்
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரின் முதற்கண் பணிந்து வணங்குகிறோம்.
இன்பத் தேன் பாயும் தமிழ் மொழியின் மேல் மாணவர்களுக்கு பற்று உண்டாகவும், தமிழ் இலக்கியங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும், எளிமையான புத்தகம் வெளியிட வேண்டும் என்ற சிந்தனை எங்களுக்கு எழுந்தது.
சங்ககாலப் புலவர்களான அகத்தியர், தொல்காப்பியர், ஔவையார், திருவள்ளுவர் ஆகியோரிலிருந்து சமீப காலத்தில் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறம் வேரூன்றச் செய்த சான்றோர்களான அருணகிரிநாதர், வள்ளல் ராமலிங்க அடிகள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்கள் வரையிலுள்ள திருக்கூட்ட மரபினரை மனதில் அசை போட்டோம்.
இந்தப் பாற்கடலை கடைந்த போது தெவிட்டாத தெள்ளமுதாக கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ராமாயணம்
மேலெழுந்தது. இந்தக் காவியத்தில் இராமனும் மற்றவர்களும் கடைப்பிடித்த தர்ம நெறியானது மாணவர்கள் தங்கள் வாழ்வை செம்மைப் படுத்திக்கொள்ள அடிக்கோலும் என்று உணர்ந்தோம்.
ஆஹா…. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது. ஒன்று, மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள்பால் ஈர்ப்பு ;மற்றொன்று, அவர்களுக்குப் பண்பாடு நிறைந்த வாழ்விற்கோர் வழிகாட்டல்.
கடுகைத் துளைத்து அதில் ஏழு கடலையும் புகுத்தியதை போல புத்தக ஆசிரியர் குழுவினர் ராமாயண இதிகாசத்தை சுருக்கமாக கதை வடிவில் மாணவர்களுக்கு புரியக்கூடிய எளிய தமிழில் கருப்பஞ்சாரு போல இந்தப் புத்தகத்தை அளித்துள்ளனர்.
ராமனுடைய வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பித்து அவர்கள் நல்லகுண நலன்களுடன் திகழ்ந்து வாழ்வில் முன்னேற்றமடைய ஏணியாய் அமையும் ஆசிரியர்களின் பணியா மகத்தானது. அந்த ஆசிரியர்களுக்கும் அவர்களை ஆதரித்து ஊக்குவிக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.